கோவையை தொடர்ந்து நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்களின் பசியாற்றுவதில் அம்மா உணவகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்கள் பலருக்கும் பசியாற உதவி வருகின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சாலைகளில் வசிப்போர், ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்கள் பசியாறும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இன்று முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் 5 அம்மா உணவகங்களும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள 3 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதையடுத்து கோவை மாவட்டம் சின்ன வேடம்பட்டி, பெரியநாய்க்கன் பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய கொரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் தொழிற்சாலைகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மையங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதும், பின்னர் அவர்கள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதும் நடைபெற்றது. இந்நிலையில் மக்களின் பசியாற்ற அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட அம்மா உணவகங்களில் திமுகவினரே இலவசமாக உணவு வழங்க முன் வந்திருப்பதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.