கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.



கோவையில் கொரோனா பாதிப்பு நிலைமையை விளக்கும் வகையில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அப்பா, அம்மா இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது 27 வயது மகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வெண்டிலேட்டர் கொடுத்தால் தான் காப்பாற்ற முடியுமென்ற நிலை இருந்தது. அம்மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியில்லை என்பதால், வேறு எங்காவது முயற்சித்து பாருங்கள் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் வெண்டிலேட்டர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டனர். பல இடங்களில் முயற்சித்தும், வெண்டிலேட்டர் கிடைக்கவில்லை. அதனால் அந்த இளைஞரை காப்பாற்ற முடியவில்லை. இது தான் கோவையின் நிலை.


குடும்பம் குடும்பாக மக்கள் அழிந்து போகும் சூழ்நிலையை தடுத்து நிறுத்த முடியாமல் மனக்கஷ்டத்துடன் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. எதுவும் செய்ய முடியவில்லை. மக்களைக் காப்பாற்ற கடவுள் வருவாரா? அரசு செய்யுமா? மாயஜாலம் நடந்து எல்லாம் மாறும் என நினைக்க முடியாது. அதேபோல அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதற்கு மேலும் சுமை கொடுத்தால் மருத்துவமனை சம்பித்து விடும். யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்படும்.



இதனை சமாளிக்க இருக்க ஒரே வாய்ப்பு தொற்று ஏற்படாமல் குறைக்க வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பு தனி மனிதர் கைகளில் தான் உள்ளது. ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று ஏற்பட்டவர்கள் வாய்ப்புள்ள வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஒரு படுக்கையறை, கழிவறை மட்டும் தான் உள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்த வாய்ப்பில்லை. கிராமங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசுப்பள்ளி, சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்களை தனிமைப்ப்படுத்தும் மையங்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அம்மையங்கள் அமைக்க வேண்டும். அப்போது தான் தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து காப்பாற்ற முடியும்.


ஒருவர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 3 முதல் 5 இலட்சம் இல்லாமல் வெளியே வர முடியாது. ஒரு குடும்பத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டால் 20 இலட்ச ரூபாய் வேண்டும். இதனை சாதாரண குடும்பங்களால் எப்படி சமாளிக்க முடியும்?. ரேசன் கடை, தடுப்பூசி மையம், பரிசோதனை மையம், காய்கறி விற்பனை வாகனங்கள் ஆகிய இடங்களில் மக்கள் முண்டியத்து நிற்கின்றனர். அவை அவசிய தேவை என்றாலும், மக்கள் 2 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும். தொற்று பாதிப்பு 5 ஆயிரம், 10 ஆயிரம் என வந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். தெருவில் மக்கள் செத்து விழும் நிலை ஏற்படும்.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிமனிதரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நம் உயிர். நம் கையில்" என அவர் தெரிவித்துள்ளார்.