கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சியில் திமுக நகர் மன்ற பெண் உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது. 32 வார்டுகளில் திமுகவும், மூன்று வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். பொள்ளாச்சி நகராட்சி 7 வது வார்டில் திமுக சார்பில் நர்மதா கண்ணுசாமி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண நகர மன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் மற்றும் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கூட்ட அரங்கில் நர்மதா கண்ணுச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவிக்கப் போவதாக இருந்தார். கூட்டத்தில் 47 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. ஆனால் தீர்மானங்கள் மீது விவாதங்கள் இன்றி, திடீரென அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐந்து நிமிடம் கூட நடைபெறாத கூட்டத்தில் தனது ராஜினாமாவை எவ்வாறு அறிவிப்பது என்பது தெரியாமல், நகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை நர்மதா கண்ணுசாமி வழங்கினார்.




இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா கண்ணுசாமி, “கடந்த 10 மாதங்களாக பொள்ளாச்சி நகராட்சி நகர் மன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த நான், எனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகல் கடிதத்தை நகராட்சி தலைவரிடம் அளித்துள்ளேன். நான் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் நகர் மன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கான களமல்ல. தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகுகிறேன். மக்களுக்கு என்னால் இயன்ற பணிகளை வேறு சிறந்த களம் அமையும். எனக்கு நகர் மன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் நன்றி.  முதல்வர் ஆட்சியில் மீண்டும் அமைந்திடும் வகையில் திமுகவின் செயல்பாடு இருக்குமென நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.


இந்த சம்பவம் திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ராஜினாமா செய்த நர்மதா கண்ணுச்சாமியை நகர மன்ற தலைவராக முன்மொழியப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தற்போதைய நகர செயலாளர் நவநீத கிருஷ்ணனின் மனைவி சியாமளா அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நர்மதா கண்ணுசாமி நகர மன்ற கூட்டத்திலும், கட்சி கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். மேலும் தனது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை நகர மன்ற தலைவர் தடுத்து வருவதாக கட்சி நிர்வாகிகளிடம் கூறி வந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நர்மதா கண்ணச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிகிறது. பொள்ளாச்சியில் நகர சபை கூட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண