கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்வில் திரண்ட ஆதரவாளர்கள் உற்சாகக் கோஷங்களுடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
போட்டி எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சியே திமுகவின் முக்கிய இலக்காகும் என தெரிவித்தார். 10 தொகுதிகளும் சமநிலையுடன் வளர்ச்சி பெற வேண்டும் என்றும், குறிப்பாக கோவை தெற்குத் தொகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார். செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், மேற்குப்புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம் போன்ற திட்டங்களை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.
அதிமுக மீது விமர்சனம் மேற்கொண்ட அவர், “அவர்கள் என்ன திட்டங்களை செய்தார்கள் என்பதை மக்களே கேட்க வேண்டும்” என்றார். மேலும், வெளியூரிலிருந்து ஆதரவாளர்களை கொண்டு வர வேண்டிய அவசியம் திமுகக்கு இல்லை என்றும், கோவையிலேயே பலத்த தொண்டர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். அதிமுக வேட்பாளர் குறித்து பேசும்போது, அவர் வெளியூரிலிருந்து வந்தவர் என்றும், தன்னை விட கோவையை நன்கு அறிய முடியாது என்றும் கூறினார். தானும் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு மக்களுடன் நெருக்கமாக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பேன் என உறுதியளித்த அவர், மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களிக்கும் நிலை உருவாகி விட்டதாகவும் கூறினார். விவசாயிகளுக்கான திட்டங்கள், குறிப்பாக பம்ப் செட் வசதிகள் போன்ற அறிவிப்புகள் பலருக்கும் பயனளிக்கும் எனவும் விளக்கினார். மொத்தத்தில், கோவை தெற்கில் கடும் போட்டி நிலவுவதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
