கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே மோட்டார் பழுது நீக்கச் சென்ற இருவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் குமார் மற்றும் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்கு மோட்டார் வால்வு மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிலைதடுமாறி அர்ஜுன் குமார், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் குமார் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். இருவரும் 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

6 மணி நேர போராட்டம்

Continues below advertisement

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் நீரை வெளியேற்றி 2 பேரின் சடலங்களை மீட்டனர். பின்னர் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசார் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே  தி.மு.க தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதுடன், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.