கோவை மாவட்டத்தில் இன்று ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 802 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க உள்ளனர். 2303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 424 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அங்கு நடக்கும் அனைத்து கட்சிகளும் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தல் முறைகேடுகளை தடுக்க 86 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 51 நுண் பார்வையாளர்கள் வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 10 ஆயிரத்து 133 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 2770 காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 22 ம் தேதி 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனிடையே நிர்மலா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கோவை மாவட்டத்தில் 7 மணி முதல் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்கினை பதிவு செய்து தேர்தல் சுமூகமாக நடக்க ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். 2770 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை 71 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பிரத்தியேக பார்வையாளர், ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் சுமூகமாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமாக வாக்குச்சாவடிகளில் ரியல் டைம் வெப் காஸ்டிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திர கோளாறுகளை சரி செய்ய பெல் இன்ஜினியர்கள் 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் ஆட்கள் உள்ளார்களா என்பது குறித்து எல்லா பகுதிகளிலும் தனிப்படையினர் ஹோட்டல், லாட்ஜ், திருமண மண்டபங்களில ஆய்வு செய்தனர். யாரையும் பார்க்க முடியவில்லை. வாகன சோதனையும் செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறை மற்றும் பணம் பட்டுவாடா புகார்கள் தொடர்கள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.