தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று முன்னேற்பாடுகள் மற்றும் நோயாளிகளை கையாளுதல் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டார்.


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, “கொரோனா நோயாளிகள் வரும் போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை கையாளுவது குறித்த ஒத்திகை நடைபெற்றது.  இந்த ஒத்திகை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் பார்வையிட உள்ளனர். நேற்று கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா நோயாளிகள் வரவில்லை.  தனியார் மருத்துவனைகளில் 13 பேர் கொரோனா பாதிப்புடன் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் தற்போது 113 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் பிளண்ட் தயார் நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புகள் தீவிரமான நிலையில் இல்லை. பெரிய பாதிப்புகள் வரவில்லை.


எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலனோர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி என்பது கூடுதலாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு அறிவுரை வழங்கினால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் இணைநோய் உள்ளவர்களுக்கு ரிஸ்க் அதிகம். அவர்கள் கட்டாயம் இல்லையென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


கொரோனா பரிசோதனை ரேண்டமாக நடத்தப்படுகிறது. தொற்று பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 16 ஆக்சிஜன் பிளண்ட் உள்ளது. ஆக்சிஜனை இருப்பு வைக்க முடியாது. ஆக்சிஜன் பிளண்ட் தயார் நிலையில் உள்ளது.  எந்த வகையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண