பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக பகுதி காவல் துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதிக்கு வருகை புரிகிறார். மசினகுடி பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளராக உள்ள பொம்மன், பெல்லி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார். பின்னர் மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் பங்கேற்கும் யானைகள் முகாமை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகள் முகாமில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக மசினகுடி சாலை வழியாக பிரதமர் செல்ல உள்ளதால், வெடிகுண்டு நிபுணர்கள் மசினகுடி பகுதியில் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து தெப்பக்காடு சாலை வரை மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சாலை, கடைகள், சாலைக்கு அடியில் பதியப்பட்டுள்ள குழாய்கள் போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மசினகுடி பகுதியில் இருந்து பிரதமர் சாலை வழியாக செல்லும் தெப்பக்காடு சாலை அடர் வனப்பகுதி என்பதால், சாலை முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நான்கு மணி முதல் முதுமலையைச் சுற்றியுள்ள தொரப்பள்ளி, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கக்கன் நல்ல சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதுமலை யானைகள் முகாமில் நிகழ்ச்சி முடிந்து பிரதமர் செல்லும் வரை வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில பந்திப்பூர் வன சோதனைச்சாவடி வழியாக பொது மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல நாளை காலை 10.30 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கக்கநள்ளா மற்றும் தொரப்பள்ளி ஆகிய வன சோதனைச்சாவடிகள் வழியாகவும் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீலகிரி மற்றும் கேரளாவிலிருந்து கர்நாடகா மாநிலம் செல்லவும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும் மாற்று பாதையாக கூடலூர் - தேவர்சோலை - பாட்ட வயல், சுல்தான் பத்தேரி, பாதையை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்