மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த விவகாரம் - வனப்பகுதியில் உயர் மின்கம்பங்கள் அமைக்க முடிவு

”வனப்பகுதியை ஒட்டிய 1 கி.மீ. முதல் அதிகபட்சமாக 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து உடன் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது”

Continues below advertisement

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவது வழக்கம். வனத்துறையினர் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

யானை உயிரிழப்பு:

இந்த நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக் காட்டில் இருந்து ஒரு ஆண் யானை நேற்றிரவு வெளியே வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த அந்த யானை பூச்சியூர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பூச்சியூர் குறுவம்மா கோவில் அருகே உள்ள பட்டா நிலத்தில் மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய போது, யானை மின் கம்பத்தில் மோதியதால் மின் கம்பம் உடைந்து யானை மீது விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்த வனத்துறையினர் மின் இணைப்பை துண்டிக்க செய்துள்ளனர். யானை உயிரிழந்த இடம் வனப்பகுதிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் எனவும், மின்கம்பத்தில் 25 வயதான ஆண் யானை தலையை வைத்து தேய்ததால் மின்கம்பம் யானை மீது விழுந்ததில் உயிரிழந்ததாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சோகம்:

மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், யானைக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மின்சாரம் தாக்கி 4 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யானைகள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

அதில் வனப்பகுதியை ஒட்டிய 1 கி.மீ. முதல் அதிகபட்சமாக 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரைப்படங்களில் வரையறுத்து அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து உடன் சரிசெய்தல். இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க வனங்களை ஒட்டிய பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் அமைத்தல், காப்பிடப்பட்ட மின்கம்பிகளை பயன்படுத்துதல், மின்கம்பங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற வழிமுறைகளை வகுத்து தொலைநோக்கு தொலைநோக்கு நடவடிக்கை மேற்கொள்வது.

வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின் வேலிகள் மற்றும் மின்கம்பிகள் ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுப் புலத் தணிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம்:

மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது மற்றும் மனித-வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பதை குறித்து வருவாய் வட்ட அளவில் வட்டாச்சியர், வனச்சரக அலுவலர், காவல் ஆய்வாளர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement