கோவை பெரியநாய்க்கன்பாளையம் அருகே பட்டா நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவது வழக்கம். வனத்துறையினர் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக் காட்டில் இருந்து ஒரு ஆண் யானை நேற்றிரவு வெளியே வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த அந்த யானை பூச்சியூர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பூச்சியூர் குறுவம்மா கோவில் அருகே உள்ள பட்டா நிலத்தில் மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய போது, யானை மின் கம்பத்தில் மோதியதால் மின் கம்பம் உடைந்து யானை மீது விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 




மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்த வனத்துறையினர் மின் இணைப்பை துண்டிக்க செய்துள்ளனர். யானை உயிரிழந்த இடம் வனப்பகுதிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் எனவும், மின் கம்பத்தில் யானை உடலை தேய்ததால் மின்கம்பம் யானை மீது விழுந்ததில் உயிரிழந்ததாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், யானைக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மின்சாரம் தாக்கி 4 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யானைகள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண