கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் விசாரணைக்காக ஆஜரானார். சுமார் ஆறு மணி நேரம் விசாரணை முடிந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இவ்வழக்கில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட நபர்களின் பட்டியலை சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். அதில் ஒரு சில நபர்களை விசாரித்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியதற்கும், நான் கூறியதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். கனகராஜ் இறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து புதிதாக 62 கேள்விகளை என்னிடம் எழுப்பினார்கள். நான் அதற்கான பதிலை தெரிவித்தேன். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை இது சம்பந்தமாக குறிப்பிட்டு பேசக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல தயாராக இல்லை. இந்த உத்தரவிற்கு எதிராக நான் மேல் முறையீடு செய்வேன். தற்பொழுது 62 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் கடந்த முறை 50க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது.


தற்பொழுது நடைபெற்ற விசாரணையும் திருப்தியாக இருந்தது. மீண்டும் ஆஜராகும்படி எந்தவித சம்மனும் வழங்கப்படவில்லை. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் நான் மன நலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறுவதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. நான் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை விசாரித்தால் ஆதாரங்கள் வெளிவரும். என்னுடைய இல்ல விழாவில் சுரேஷ்குமார் கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்களும் என்னிடம் உள்ளது. சுரேஷ்குமார் தான் 24 மணி நேரத்தில் குறைந்தது நான்கில் இருந்து 5 மணி நேரம் என்னுடைய தம்பி கனகராஜிடம் பேசுவார். என்னுடைய தம்பியும் அவரிடம் நன்கு பேசுவார். சென்னை சென்றாலும் இருவரும் ஒரே அறையில் எடுத்து தங்குவார்கள். ஒன்றாகவே மது அருந்திவிட்டு வரும் வரை ஒன்றாகத்தான் இருப்பார்கள். 
கனகராஜ் உயிரிழந்த பொழுது மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக ஊற்றி கொடுத்து அந்த இடத்திலேயே விபத்து நடத்தினார்கள் அல்லது உடன் இருந்தவர்கள் வேறு இடத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை. அது விசாரணையில் தெரியவரும்.


சுரேஷ்குமார் என்னுடைய தம்பி இருந்த சம்பவ நேரத்தில் இல்லை. ஆனால் சுரேஷ்குமார் இருதரப்பிலும் பாலமாக செயல்பட்டார். மது அருந்திய நேரத்தில் 10 பேர் இருந்துள்ளார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இளங்கோவனின் தீவிர விசுவாசியை சொல்லலாம். மனநிலை சரியில்லை எனக்கு ஜாமின் வழங்கும் படி நான் எப்பொழுதுமே கேட்டதில்லை. தூக்கம் வராததால் தான் நான் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன்” என்றார். கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தனபால் கூறி வந்த நிலையில், அவ்வழக்கில் அவரை தொடர்புபடுத்தி பேச சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.