இறைவனை நேசிப்பவர்களும், இயற்கையை நேசிப்பவர்களும் ஒருசேர விரும்பி செல்லும் பகுதியாக வெள்ளியங்கிரி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதன் காரணமாக இந்த மலை வெள்ளியங்கிரி என்ற பெயர் பெற்றுள்ளது. இதற்கு தென்கைலாயம் என்ற பெயரும் உண்டு. வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம் எனக் கூறப்படுகிறது. பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் மலையேறும் பக்தர்களும் உண்டு. குறிப்பாக மகா சிவராத்திரி முதல் சித்ரா பெளர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறி சுயம்பு லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.
ஏழு மலைகளின் சிறப்பு
மலையேற்றம் செய்யும் போது, ஏழு ஏற்ற இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் இந்த மலையை ஏழுமலை என்கிறார்கள். முதல் மலை செங்குத்தான பாதை கொண்டிருப்பதால், படிக்கட்டுகளில் ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும். முதல் மலையைத் தாண்டும் போது வெள்ளை விநாயகர் கோயில் அமைந்திருக்கும். இரண்டாவது மலைகளில் உள்ள படுக்கட்டுகளில் ஏறி செல்லும் போது, வழுக்குப் பாறை வந்தவுடன் இரண்டாவது மலை முடிந்துவிடும்.
மூன்றாவது மலையில் கைதட்டிச் சுனை அமைந்துள்ளது. இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்பது ஒரு நம்பிக்கை. நான்காவது மலை சமதளத்தில் மண் மலையாக இருப்பதால் நடந்து செல்ல எளிதாக இருக்கும். இங்கு ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கும். இந்த நான்காம் மலையில் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அமைந்துள்ளது. ஐந்தாம் மலைக்கு ‘பீமன் களியுருண்டை மலை’ என்ற பெயர் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் வெள்ளியங்கிரிக்கு வந்ததால் பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் ‘அர்ச்சுனன் தலைப் பாறை’ போன்ற இடங்கள் இங்கு உண்டு. இந்த மலை ஏற்ற இறக்கம் நிரம்பியதாக இருக்கும். ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்குள்ள ஆண்டு சுனையில் பக்தர்கள் குளித்து செல்வது வழக்கம். இந்த மலையில் வெள்ளை மணல் இருப்பதால், ’திருநீறுமலை’ என அழைக்கப்படுகிறது. ஏழாவது மலையான கிரி மலை ஏறுவதற்கு சிரமமும், சவாலும் கொண்டது. ஆறு மற்றும் ஏழாவது மலைகளில் இரவு நேரங்களில் உடலை உறையச் செய்யும் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும்.
மலையேற்றத்திற்கான அவகாசம் நிறைவு
10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு மலையேற அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், 9 பக்தர்கள் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தனர். இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவடைந்தது. கடந்த பிப்ரவரி முதல் இன்று வரை 2.25 இலட்சம் பேர் மலையேற்றம் செய்துள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு சுமார் 25 ஆயிரம் பேர் கூடுதலாக மலையேற்றம் செய்துள்ளனர். வெள்ளியங்கிரி மலையேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்ததால், மலையேறுவதற்கான வனப்பாதைகள் அனைத்தையும் வனத்துறையினர் மூடினர். இதனை மீறி மலையேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.