கோவை நீதிமன்றம் அருகே கடந்த பிப்ரவரி 13 ம் தேதி பட்டப்பகலில் கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. ரத்தினபுரி, கண்ணப்பநகர் பகுதிகளில் ரவுடிகளின் பலத்தை காட்டும் வகையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த கொடூர கொலை சம்பவத்தை தொடர்ந்து, காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


குறிப்பாக கோகுல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக அவர்கள் பகையை வளர்க்கும் விதமாகவும், ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மிரட்டும் வகையிலும் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. Praga Brothers மற்றும் Rathinapuri Bloods ஆகிய பெயரில் இரண்டு குழுக்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பகையை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனிடையே பல்வேறு ரவுடிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை காவல்துறையினர் நோட்டமிட்டு Anti Rowdy Drive என்ற பெயரில் 80க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் Praga Brothers என்ற குழுவைச் சேர்ந்த கௌதம் என்பவர் தன்னை காவல் துறையினர் என்கவுண்டர் செய்யும் அச்சம் உள்ளதாக கூறி, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். பின்னர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த கெளதம், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கெளதமின் கூட்டாளிகள் சிலரை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று சுமார் 4 கி.மீ. தூரம் மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் 4 ரவுடிகளை விரட்டி சென்று பிடித்துள்ளனர். இதனிடையே அமர் என்ற ரவுடியை காவல் துறை தூரத்திய போது, அவர் ஓடி சென்று ஒரு பகுதியில் நின்று, ”என் கை கால்கள் நன்றாக உள்ளது. என்னை விரட்டுகிறார்கள். என்னை என்ன செய்ய போகிறார்கள்” எனத் தெரியவில்லை என்று வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் தனிப்படை ஆய்வாளர் ராஜ்குமார் தேடப்படும் குற்றவாளி சுஜி மோகன் என்பவரிடம் பேசியதாக, ஒரு ஆடியோவையும் thellavari என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் "நீ ஓடு உன்னை நான் பிடித்து கொள்கிறேன், பிடித்த இடத்திலேயே உன்னை முடித்து விடுவேன். காலில் சுட்டு பிடிக்கிறேன். என் பேச்சை நானே கேக்க மாட்டேன்”  என காவல் ஆய்வாளர் ராஜ்குமார் பேசுவது போல உள்ளது. இந்நிலையில் பெங்களூரூவில் சுஜி மோகன், பிரசாந்த், அமர், புள்ளி பிரவீண் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை கோவை கொண்டு வந்து விசாரிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண