கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்தது. 6 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும், 2 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


தொடர் திருட்டு:


இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களும் ஒரே பாணியில், வார விடுமுறை நாட்களில் மட்டும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


அதில் ஒரே நபர் இந்த கொள்ளை சம்பங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த சிவசந்திரன் (54) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 57 சவரண் தங்க நகைகள், 31 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் திருடிய பணத்தில் வாங்கிய இனோவா கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.




கைது செய்தது எப்படி?


இது குறித்து கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் கூறுகையில், “பீளமேடு பகுதியில் ஒரே பாணியில் கடந்த 2 மாதங்களில் வார விடுமுறை நாட்களில் மட்டும் தொடர் திருட்டு நடந்து வந்தது. அதிக கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில், கைரேகை இல்லாமல் நள்ளிரவு 2 மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டுமே வீட்டை உடைத்து தங்கம் மட்டும் திருடப்பட்டு வந்தது. ஒரு நபர் இரண்டு, மூன்று நாட்கள் வீட்டை முழுவதுமாக கண்காணித்து எவ்விதமான ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்து கொண்டே திருட்டில் ஈடுபட்டு வந்தார்.


இரு சக்கர வாகனத்தில் வந்து திருட்டில் ஈடுபட்ட நபரின் முகம் கேமராவில் பதிவாகவில்லை. வாகனத்தின் எண்ணும் கிடைக்கவில்லை. உருவ அமைப்பை வைத்து ஆராயும் போது அவர், ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்ததும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. அதைவைத்து திருட்டில் ஈடுபட்ட சிவசந்திரன் என்பவரை கைது செய்துள்ளோம்.




கார் திருட்டு வழக்குகள்:


கடந்த 3 மாதங்களில் மட்டும் 143 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளார். அதில் 80 சதவீத பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். 2018 ம் ஆண்டிற்கு முன்பு சிவசந்திரன் மீது பல கார் திருட்டு வழக்குகள் இருந்தது. சில ஆண்டுகளாக எந்த திருட்டிலும் ஈடுபடாமல் இருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார்.


கோவை மாநகர பகுதியில் தற்போது கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா செல்லக்கூடிய நபர்கள் வீடு பூட்டி இருந்தால் அது குறித்து அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தினமும் இரவு நேரங்களில் காவல் துறையினர் வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண