தருமபுரி மாவட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 5 ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி 6 ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, கிராம பகுதிக்குள் நுழைந்தது. அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வந்தது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களை கடந்து, சுமார் 140 கி.மீ. தூரத்திற்கும் மேலாக நடந்து கோவை மாநகரப் பகுதியை மக்னா யானை அடைந்தது. பின்னர் மக்னா யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் மக்னா யானைக்கு காலர் ஐ.டி. பொருத்தப்பட்டு மானம்பள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர். வனத்துறையினர் தொடர்ந்து அந்த யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த மக்னா யானை தம்மம்பதி பகுதிகளில் உலா வந்த மக்னா தனியார் தோப்புகளுக்குள் உலா வந்தது. 4 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து யானையை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்கி யானைகளான முத்து, சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தன் ஆகிய யானைகளை சரளபதி பகுதியில் மக்னாவை கட்டுப்படுத்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சரளப்பதி அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் அந்த யானை புகுந்ததை அடுத்து, வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரின் வாகனத்தை மறைந்திருந்து வந்த மக்னா யானை திடீரென தாக்கியது. இந்த தாக்குதலில் ஜீப் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் வாகன ஓட்டுநர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன், வனக்காப்பாளர் ராஜ், வேட்டை தடுப்பு காவலர்களான அகிலேஷ் மற்றும் மணி உள்ளிட்ட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் வனந்துரையினரின் வாகனம் சேதமானது. இந்த தாக்குதலில் காயப்பட்டவர்கள் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வனத்துறையினர் மக்னா யணையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்