Covai: இதய அறுவை சிகிச்சைக்காக குழந்தை, திருச்சியில் இருந்து கோவைக்கு 2.45 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிசுவிற்கு அறுவை சிகிச்சை:
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினிமா பாணியில், பிறந்த 7 நாட்களே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்காக அந்த குழந்தை திருச்சியில் இருந்து கோவைக்கு, ஆம்புலன்ஸ் மூலமாக 2.45 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் நவகுடியைச் சேர்ந்தவர்கள் தான் திருமுருகன் துர்காதேவி தம்பதி. இவர்களுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது. அப்போது மேற்கொள்ளப்பட மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையை உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.
கோவையில் அறுவை சிகிச்சை ஏற்பாடுகள்:
இதைத் தொடர்ந்து, குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பர்சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேநேரம், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லை எனவும், கோவையில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை அங்கு அழைத்துச் செல்ல பெற்றோர் முடிவு செய்தனர். அதுவும் சாலை மார்க்கமாகவே குழந்தையை அழைத்துச் செல்ல திட்டமிட்டு, இதற்காக போக்குவரத்தை சீர்படுத்தி தருமாறு காவல்துறையை நாடினார். அவர்களும், தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.
2.45 மணி நேரம், 220 கிமீ தூரம் - சீறிய ஆம்புலன்ஸ்:
திட்டமிட்டபடி, புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து குழந்தையை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ், அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து 2.45 மணி நேரத்தில் கோவை மருத்துவமனையை வந்தடைந்தது. ஆம்புலன்ஸ் பயணித்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், காவல் துறையினர் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.
கண்காணிப்பில் குழந்தை:
அறுவை சிகிச்சை மேற்கொண்ட கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், ”குழந்தைக்கு இதயத்தில் இருந்து சுத்த ரத்தத்தை உடல் முழுக்க கொண்டு செல்லும் தமணியில் சுருக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என்றார். இதையடுத்து அந்த குழந்தை தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், ”குழந்தையை விரைவாக கோவை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. காவல் துறை மற்றும் மக்கள் ஒத்துழைப்பால் ஆம்புலன்ஸ் வாகனத்தை எளிதில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிந்தது. இதனால், மூன்றரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை இரண்டே முக்கால் மணி நேரத்தில் கடக்க முடிந்தது” என தெரிவித்துள்ளார்.