கோவையில் உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழந்த நண்பரின் நினைவாக, அவரது நண்பர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர். கோவையில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பில் சென்னையை கோவை முந்தியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதேபோல படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காதது உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது.
கோவையை அடுத்த அசோகபுரம் பகுதியில் ஆக்சிஜன் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி உரிய நேரத்தில் கிடைக்காததால், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது நண்பர்கள் இணைந்து ஆக்சிஜன் வதியுடன் கூடிய இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை துடியலூர், அசோகபுரம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நண்பர்கள் அறக்கட்டளையினர் கூறுகையில், “கடந்த வாரம் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. 4 மணிநேர காத்திருப்பிற்கு பிறகு ஆம்புலன்ஸ் கிடைத்து. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை உள்ள மருத்துவமனையை தேடி அலைந்து சேர்த்தோம். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் நண்பரை காப்பாற்ற முடியவில்லை. நண்பருக்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்ற முனைப்பில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென முடிவு எடுத்தோம். ஒரு வார கால முயற்சியில் அசோகபுரம் மக்களின் நிதியுதவியோடு இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளோம். 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை வழங்க உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
கொரோனா உதவி மையமாக மாறிய கட்சி அலுவலம்
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகம் கொரோனா பேரிடர் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் தபெதிக அமைப்புகள் இணைந்து இம்மையத்தை அமைத்துள்ளனர். இம்மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.
இம்மையத்தை 7449110884, 9952579108, 9940766109, 9894323590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும், ஆம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் கான்செண்டிரேடர், மன நல ஆலோசணைகள், மருத்துவமனைகள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.