கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்த வரும் நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அப்பள்ளியில் பணி புரியும் 26 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் பத்தாம் வகுப்பு பயிலும் 59 மாணவ, மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். ஒரே பள்ளியில் மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மூன்று நாட்களுக்கு அப்பள்ளியை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி வளாகம் கட்டுப்படுத்தப்பட்ட பள்ளி வளாகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.




நெசவாளர் காலணி பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் ஊத்துக்குளி அரசு பள்ளி அசிரியர் ஒருவருக்கும், தாராபுரம் கொளத்துப்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியருக்கு நேற்றும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மதிய உணவு இடைவெளியின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை தடுக்க ஆசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.