கோவை அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று நேற்று அதிகாலையில் கிடந்துள்ளது. சாலையில் கிடந்த சடலத்தின் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதால் உருக்குலைந்த நிலையில் இருந்தது. இது குறித்து இருகூர் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தனியார் மருத்துவமனை அருகே ஒரு கார் செல்வதும், காரின் வலது பக்கத்தில் இருந்து பெண் சடலம் விழுந்த நிலையில் இரண்டு வாகனங்கள் உடலின் மீது ஏறி இறங்கி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த  சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் சடலம் மீது வாகனங்கள் ஏறி இறங்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிரிழந்த பெண் அறைகுறை ஆடையுடன் அரை நிர்வாண நிலையில் உடல் சிதைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண் மீது வாகனம் ஏறி இறங்கி சென்ற நிலையில், சிறிது தூரம் சென்று வாகனம் நிறுத்தப்பட்டு இரண்டு பேர் இறங்கி வந்து பார்த்து விட்டு வாகனத்தை ஒட்டிச் சென்றதாக தெரிகிறது.




அதிகாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் விபத்தில் அடிபட்டு காரில் சிக்கி இழுத்து செல்லப்பட்டாரா அல்லது சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டு காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாரா அல்லது வேறு பகுதியை சேர்ந்த பெண்ணை திட்டமிட்டு கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் சடலம் விழுந்த காரின் பதிவு எண்ணை கொண்டு காவல் துறையினர், அந்த வாகனத்தையும், உரிமையாளரையும் தேடி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடற்கூராய்வு முடிவில் விபத்தா அல்லது கொலையா என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.