கோவை வடகோவை பகுதியில் உள்ள சிந்தாமணி நியாய விலை கடையில் 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, ”இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்கள், சாலை மற்றும் நடைமேடைகளில் கடை அமைப்பவர்கள், மாணவர்கள், வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்பவர்கள், மீனவர்கள் ஆகியோர் அதிகமாக பயன்பெறுவர்.


கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, முகவரிக்கான தகவல்களை மட்டும் அளித்து எளிதாக கேஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதனால் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவது வெகுவாக குறையும். நாளைய தினம் 69ஆவது கூட்டுறவு மாநில விழா கோவை கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.




கூட்டுறவு துறையை புதுப்பொலிவுடன் முன் கொண்டு செல்ல முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் உள்ள 5164 நியாய விலை கடைகள் ISO தரச்சான்று பெற்றுள்ளது. 2952 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடன்களை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 697 விவசாய சங்கங்களின் மூலம் 1 லட்சத்து 88 ஆயிரம் விவசாயிகளுக்கு 1231 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உட்பட கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 801 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு 8.47 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு, 216.8 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயோமெட்ரிக் மற்றும் கருவிழி பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிட் காலகட்டத்தில் ரேஷன் கடைகளின் மூலம் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது வரும் ஆண்டுகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் கூட்டுறவுதுறை அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண