கோவை வனக்கோட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகளுக்கான கணக்கெடுப்பில் 228 பறவை இனங்கள் மற்றும் 170 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறியதாவது, ”கோவை வனக்கோட்டம் 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், மதுக்கரை, போளுவம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளது. கோவை வனக்கோட்டம் நீலகிரி உயிர்க் கோளக் காப்பகத்தின் ஒரு அங்கமாக திகழ்கிறது. கோவை வனக்கோட்டம் பசுமை மாறா காடுகள், புல்வெளிகள், ஈர மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள், வறண்ட புதர்க்காடுகள் மற்றும் ஆற்றோர காடுகள் கொண்டவை. 




7 வனச்சரக பகுதிகளில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் கோவை வனத்துறை, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு, கோவை இயற்கை அமைப்பு மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தியது. இதில், 82 இயற்கை ஆர்வலர்கள் மற்றும் 68 வன அலுவலர்கள் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப்பட்டது.




கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர்கள் தினேஷ் குமார், செந்தில்குமார் மற்றும் வனச்சரக அதிகாரிகள் காடுகளில் நடைபெற்ற கணக்கெடுப்பு களப்பணிகளை மேற்பார்வையிட்டனர். இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கன்னியாகுமரி மற்றும் சென்னை பகுதிகளை சேர்ந்த பறவை மற்றும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் புதுவை மாநிலங்களிலில் இருந்தும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.




இந்த கணக்கெடுப்பில், மொத்தம் 228 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 118 பாசரைன் வரிசையைச் சார்ந்தவை. மீதம் உள்ளவற்றில் 25 நீர்வாழ் பறவைகள், 16 கழுகுகள் மற்றும் பருந்துகள், 11 குக்குறுவன் மற்றும் மரங்கொத்திகள், 10 மீன் கொத்திகள், பஞ்சுருட்டான்கள் மற்றும் பனங்காடை, 8 புறா இனங்கள், 8 குயில் இனங்கள், 7 மயில் உள்ளிட்ட தரைவாழ் பறவைகள் கண்டறியப்பட்டன. மேலும், பக்கிகள், ஆந்தைகள், இருவாச்சிகள், உழவாரன்கள், தீக்காக்கை, வல்லூறு மற்றும் கிளிகள். பெரிய இருவாச்சி, மலபார் இருவாச்சி, கருங்காடை, சாம்பல் நெற்றிப்புறா, பச்சைப்புறா, செவ்வலகு செண்பகம், பெருங்கண்ணி, பருத்த அலகு ஆலா, சிறிய மீன் கழுகு, பெரிய புள்ளிப்பருந்து, பழுப்பு காட்டு ஆந்தை, ஐரோப்பிய பஞ்சுருட்டான், மலபார் மைனா மற்றும் கருஞ்சிவப்பு வால் பூச்சிபிடிப்பான் ஆகிய பறவைகள் பதிவு செய்யப்பட்டன.




மேலும், கோவை வனக்கோட்டத்தில் மொத்தம் 170 பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ன. இவற்றில் 15 அழகிகள் குடும்பத்தையும், 25 வெள்ளையன்கள், புல்வெளியான்கள், நுனிச் சிறகன்கள் குடும்பத்தையும், 50 வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் குடும்பத்தையும், 46 நீலன்கள் குடும்பத்தையும், 38 தாவிகள், துள்ளிகள் குடும்பத்தையும் சார்ந்தவையாகும். இதில், முக்கிய பதிவாக மேகுலேட் லேன்ஸர் என்னும் பட்டாம்பூச்சி வனக்கோட்டத்தில் முதன்முறையாக போளுவம்பட்டி வனச்சரகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டது.




தவிர, மலை நாட்டு அழகி, கருப்பு-வெள்ளை அழகி, புள்ளிவால் அழகி, நீலகிரி மஞ்சள் புல்வெளியாள், சாக்லேட் வெள்ளையன், கருத்த அந்திச்சிறகன், பெரிய அந்திச்சிறகன், கரும்பழுப்பு சிறகன், சிறு கோட்டு ஐந்து வளையன், பெயின்டட் கோர்டீசன், இந்தியன் பியர்ரோ, செஸ்ட்நட் ஆங்கிள் ஆகிய பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அவர் கூறினார்.