கோவை பெரிய தடாகம் பகுதியில் இறந்த யானையின் உடலில் தந்தம் திருடப்பட்டது தொடர்பாக, நேரில் ஆஜராகி விபரங்கள் தெரிவிக்கும் படி மூன்று குழந்தைகளுக்கு கோவை வனத்துறை சம்மன்  அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. 


இந்நிலையில் கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் யானையின் உடல் கிடந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து யானையின் உடலைக் கைப்பற்றி, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யானையின் உடலில் இருந்து வலது தந்தம் திருடப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே யானை தந்தம் திருடப்பட்ட வழக்கில் 15 வயது, 12 வயது, 11 வயது உடைய மூன்று குழந்தைகளுக்கு கோவை வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 3 பேரும் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




கோவை வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களுக்குத் தெரிந்த விவரங்களையும், தகவல்களையும் தெரிவிக்குமாறு வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் மூன்று குழந்தைகளுக்கு வனத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரச் சொல்லி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண