காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன எல்லையில் கான்கீரிட் சுவர் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் அருகில் உள்ள கோவை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை  வளாகத்தில், வேளாண் கருவிகளை காட்சிப்படுத்தும் வகையில் வேளாண் கருவிகள் படக் காட்சி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை இன்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.


பின்னர் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "உழவர் நலத்துறைக்கு  தனியாக பட்ஜெட் போட்டு 37 ஆயிரம் கோடி ரூபாயினை தமிழக அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் பயனடைவார்கள். இந்த வேளாண் கருவிகள் கண்காட்சியில் விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 52 விதமாக வேளாண் கருவிகள் குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது.




கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 7000 அளவிற்கு இருந்த தொற்று தற்போது 200-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரொனா 3-வது அலை இந்த மாத கடைசி  அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வர வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு இருக்கின்றது. கோவை மாவட்டதில் 22 லட்சம் பேர் வரை இது வரை தடுப்பூசி போட்டுள்ளனர். இது வரை 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி போடப்பட இருக்கின்றது.


தமிழகத்தில் தற்போது  23.98 சதவீதம் மட்டுமே வனம் இருக்கிறது. அடுத்த 10 ஆண்டு காலத்தில் தமிழக வனத்தின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1,30,060 ஹெக்டேர் பகுதியில் மரம் நடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. யானை மனித விலங்கு மோதலை தடுக்க வன எல்லைகளில் 3 மீட்டருக்கு அகழி  வெட்டப்பட்டு, அகழியின் இருபுறமும் கான்கீரிட் சுவர்களை ஏற்படுத்தினால் அந்த அகழி 25 முதல் 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். தற்போது வெட்டப்படுகின்ற அகழிகள் ஒரு வருடத்திலேயே மண் சரிந்து விடுகிறது. இதனால் யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. ஒரு சில இடங்களில் அகழிகள் வெட்டப்பட்டு கான்கிரிட் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்துள்ளோம். அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.