கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கொரோனா தொற்று தடுப்பு உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று கோவையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்  ’Left Help center for Covid-19’ என்கிற பெயரில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், குணமடைந்தவர்களை இல்லத்திற்கு அழைத்து செல்லவும் இலவச வாகன சேவையை  அக்கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.



இந்த உதவி மையம் குறித்து அக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி கூறுகையில், ”கொரோனா தொற்று 2 ஆவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னேடுப்புகளை அரசு எடுத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள சூழலில், பொது மக்களுக்கு உதவும் விதத்தில் மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தின் மூலம் அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள், நோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள் குறித்த விபரம், மருத்துவ ஆலோசனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான தொலை தொடர்பு  வழி ஆலோசனை, வாகன உதவி, மற்றும் ரத்த தானம் செய்வது குறித்த விபரங்கள், ஆகிய உதவிகள் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்துறை சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்டு கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்து இந்த உதவி மையம் Left Help center for Covid-19 என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.



இம்மையத்தின் உதவியை நாட 94438 84053,  94887 08832, 86800 91826,  99941 58832, 81898 02073 என்கிற இந்த எண்களில் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்” என அவர் தெரிவித்தார்.



இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், ”கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இலவச வாகன சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு காரணமாக வாகன வசதி இல்லை என்பதால் கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்ப வேண்டியவர்கள், நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் இம்மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொலை பேசி எண்களை அழைத்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லும் ஏற்பாட்டை செய்துள்ளோம்.  இந்த சேவை என்பது 24 மணிநேரமும் செயல்படுகிற வகையில் கட்சியின் நிர்வாகிகள் அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவையாற்ற காத்திருக்கிறார்கள். இந்த வாகனம் என்பது முழு இன்சூரன்ஸ் உடையது என்பதும், இந்த வாகனம் எந்த வகையிலும் போலியானது அல்ல விளம்பரத்திற்கானது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பிற உதவிகளுக்கும் பொதுமக்கள் இந்த அறிவிக்கப்பட்ட எண்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.