நீலகிரி மாவட்டம் உதகை அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 4,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை எளிய மற்றும் விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்ட குழந்தைகளாக உள்ளனர். தற்போது சமவெளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து பயின்று வருகின்றனர். இவர்கள் விடுதிகளில் தங்கி பயில வேண்டிய நிலை உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசு கலைக் கல்லூரி உள்ளது. தனியார் கல்லூரிகள் எதுவும் இல்லை. இதனால் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த இரண்டு கல்லூரிகளிலேயே சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.


இந்நிலையில், இந்த கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பணம் உள்ள பிரவுன் கவரை வழங்குகிறார். அப்போது, மாணவரை பார்த்து, “சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போதுதான் இடம் கிடைக்கும்” எனக் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.


ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக சில பேராசிரியர்கள் ஏற்கனவே இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக மாணவர்கள் விரும்பிய துறைக்கு மாற்றி தருவதற்காக பேராசிரியர் ரவி என்பவர் மாணவர்களிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கலைக்கல்லூரி முதல்வர் விடுதி ஒதுக்கீடு செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட கல்வி இயக்கக துணை இயக்குநர் விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்குவதற்காக பரிந்துரை கடிதம் வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி மற்றும் விரும்பிய பாடப்பிரிவிற்கு மாற மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற புகாரில் தாவரவியல் பேராசிரியர் ரவி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.