கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடும் பணிகளை செய்து வருகிறது. அதில் தமிழகத்தில் இந்த ஆண்டு இலக்காக 1.1 கோடி மரங்களை நடும் பணிகளை துவக்கியுள்ளது. ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட உள்ளன. சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர்.
குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனர். இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மரக் கன்றுகளை நடும் பணியும், நொய்யல் ஆற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகள் துப்புரவு பணியும் தன்னார்வத்தொண்டர்கள் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், “உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் இப்பகுதியில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் வனங்களின் பரப்பு 22 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த மரங்கள் நடப்பட்டு வருகின்றன. நான் கிராமத்து பள்ளிக்கூடத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்றேன். விடாமுயற்சி, கடின உழைப்பு காரணமாக இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
தேங்காய் விலை குறைந்து வருகிறது. தென்னை விவசாயம் சாவலாக உள்ளது. நாட்டில் உள்ள 60 சதவீத மக்களுக்கு தான் சமையல் எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள சமையல் எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. உணவு பண்டங்களின் விலையை குறைக்க வேண்டும் என 35 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் விலை 50 ரூபாய் குறைந்தது. விலை குறைந்தவுடன் 2 இலட்சம் கோடிக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் வாங்க உள்நாட்டில் சந்தை இல்லை. தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது விவசாயிகளுக்கு சாவலாகியுள்ளது. விவசாயிகள் வருமானம் குறைந்து வருகிறது. மீண்டும் வரியை மத்திய அரசு உயர்த்தாது. இதனால் தேங்காய் விலை இன்னும் குறையும்.
இறக்குமதி, ஏற்றுமதி வரியை நிர்ணயிக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை. பிரதமருக்கு கடிதம் தான் எழுத முடியும். தேங்காய் விலை உயராது. வருமானம் தரும் மரங்களை விவசாயிகள் நட வேண்டும். இளைஞர்களும், தென்னை விவசாயிகளும் மரம் நட வேண்டும். 22 சதவீதமாக உள்ள வனப்பரப்பு அடுத்த பத்தாண்டுகளில் 33 சதவீதமாக உயர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5.7 லட்சம் மரக்கன்றுகள் நட அவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது. மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குருவால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.