வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலங்களில் அடியில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் சாலையில் மழைநீர் ஓடி வருகிறது. இந்த பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி வழிந்து செல்லும் சாலையில் ஓடியது. மேலும் செட்டி வீதி, அசோக் நகர் ஆகிய பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது.




செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த பகுதியில் மழை பாதிப்புகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


செல்வசிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமாக தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அசோக் நகர் பகுதிக்குள் புகுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.


இந்நிலையில் இன்று குளத்தின் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் குளத்தில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. அசோக் நகர் பகுதியில் குடியிருப்பை சூழ்ந்துள்ள வெள்ள நீரின் அளவு குறைந்துள்ளது. அதேசமயம் முழுமையாக வெள்ள நீர் வெளியேறாததால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் செல்வபுரம் மாநகராட்சி பள்ளிக்குள்ளும் புகுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் வெள்ள நீர் தேங்கி இருக்கிறது. இதனால் அப்பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.