கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கார்த்திகேயன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ்.பி.யாக பணியாற்றியதாகவும், தான் ஒரு பல் மருத்துவர் இருந்து பின்னர், ஐபிஎஸ் பணிக்கு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்வேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் நடமாட்டம் தடுக்கப்படும். போதை பொருள் விவகாரத்தில் முக்கிய கவனம் எடுத்து கண்காணிக்கப்படும். இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்தலின் விளைவு குறித்தான விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படும். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். போக்குவரத்து விபத்து நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். முன்னதாக சிசிடிவி கேமராக்கள், போலீஸ் பற்றாக்குறை போன்றவை ஆய்வு செய்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதை தொடர்ந்து மீண்டும் மோதல், கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.