மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 11 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், மத்திய அரசு உடனடியாக இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, ஏஐடியூசி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கோவை ரயில் நிலையம் முன்பாக கூடிய போராட்டக்காரர்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பிய படி ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்திற்கு நுழையாத வண்ணம் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்புகளையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கேரட், வெண்டை, பாவக்காய், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தின் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கோவையில் கடைகள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. கோவையில் உள்ள சாலைகள் வழக்கம் போல பரபரப்பாக காணப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக காந்திபுரம், டவுன் ஹால், பேரூர் சாலை உள்ளிட்ட இடங்களில் ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நகரின் சில இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.