கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக வந்த 29 வயது அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த, அமிர்தேஷ் என்ற அதிகாரியை காட்டூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விளையாட்டின் போது காயமடைந்த நிலையில், தனது அறைக்கு ஓய்வுக்காக சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார்.


கோவை மாநகராட்சி முதன்மை பொறியாளர் லட்சுமணன் மற்றும் உதவி செயற் பொறியாளர் சரவணன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தபோது, டெண்டர் முறைகேடு தொடர்பாக லட்சுமணன் மற்றும் சரவணன் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டு அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை மற்றும் நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்த நிலையில், நீலகிரியில் தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றித் திரியும் புலியை பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்ற தோட்ட தொழிலாளி புலி தாக்கி உயிரிழந்தார். மேலும் ஆடு, மாடுகளை புலி அடித்துக் கொன்று வருவதால், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தேவன் 1 அருகே மே பீல்ட் என்ற இடத்தில் மேலும் ஒரு படுமாட்டினை புலி அடித்துக் கொன்றது. புலி நடமாட்டம் காரணமாக தேவன் 1 பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் கோவையில் வழக்கம் போல கடைகள் திறந்திருக்கின்றன. பேருந்துகள் உள்ளிட்டவை ஓடி வருவதால் இயல்பு நிலையில் உள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த மூன்றாவது வாரமாக மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 439 தடுப்பூசி மையங்களில் ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதலான பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 1,10,317 நபர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். தடுப்பூசி முகாமில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29, 30 ஆம் தேதிகளில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கெங்கரை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையை புதைத்த வழக்கில், காட்டு ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில், புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி யானையின் எலும்புக்கூடுகளை வனத்துறையினர் எடுத்தனர்.