கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதிகளில் சார்பு ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் உள்ளிட்ட காவல் துறையினர், நேற்றிரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நான்கு பேர் நின்று கொண்டிருப்பதை காவல் துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 4 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ் (23), ஆனந்த் (25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (43) என்பதும், அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்த போது, 26 கட்டுகள் கூடிய மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அவர்களிடம் விசாரிக்க சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடி பொருளை எவ்வித உரிமமும் இன்றி பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அதன் பேரில் காவல் துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது வேலை நடந்து வரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த வெடிபொருட்களை சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோர்களிடமிருந்து வாங்கியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து தினேஷ், ஆனந்த், சுரேஷ்குமார், செந்தில்குமார், ரங்கராஜ், பெருமாள், கோபால், சந்திரசேகரன் ஆகிய 8 பேரையும் காரமடை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனன் வெகுவாக பாராட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்