கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.78 லட்சம் பணத்தை கேரளா நகை பட்டறை ஊழியர்களிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை செட்டிபாளையம் அருகே மதுக்கரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலை ஓரத்தில் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் காரின் அருகே சென்று பார்த்த போது, மூன்று நபர்கள் காரின் இருக்கையின் அடியே கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் பணத்திற்கும் உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது பிடிபட்ட நபர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சசிகாந்த் (50), நிகில் (25), சுரேஷ் (47), என்பதும், இவர்கள் வடக்கஞ்சேரி பகுதியில் உள்ள தங்க நகை பட்டறையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்ல முயன்ற ரூ.78 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்களின்றி ரூ.78 லட்சம் பணம் வைத்திருந்ததால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் மதுக்கரை காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். இந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணத்திலும், எப்படி இந்த பணம் அவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வழியாக கேரளா மாநிலத்திற்கு ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவதும், அவ்வப்போது காவல் துறையினர் சோதனைகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.