திருச்சியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் கோவையில் தங்கி இருந்து ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் நகர பேருந்தில் சென்றுள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த பெண் ஒருவர் தன்னிடம் இருந்த ஐந்து மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ரயில் நிலையம் வந்த பின் திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது, பேருந்தில் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா இது குறித்து பேருந்து நடத்துநரிடம் தெரிவித்தார். பின்னர் பேருந்தை ரயில் நிலையம் அருகே நிறுத்தி விட்டு குழந்தையின் தாயை பேருந்து முழுவதும் தேடியுள்ளனர்.


ஆனால் அந்தப் பெண் இல்லாததால் உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இந்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினரிடம் குழந்தை ஒப்படைக்கபட்டது. பின்னர் குழந்தை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு வார்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் அடையாளங்களை பெற்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையின் தாய் யார் என்பது குறித்தும், அல்லது திருடப்பட்ட குழந்தையா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் கைக்குழந்தையை தாய் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதேபோல கோவை மாநகர காவல் துறையில் முதல் நிலை காவலராக பணி புரிபவர் ஆனந்த். 30 வயதான இவர் ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து பிரிவு காவல் துறையில் போக்குவரத்து காவலராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ராஜா லாரி வெயிட் பிரிட்ஜ் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது 3 இளைஞர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் வந்துள்ளனர். அவர்களை போக்குவரத்து காவலர் ஆனந்த் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் காவலர் ஆனந்தை இழிவாக பேசியதோடு, கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சாய்பாபா காலனி காவல் துறையினர் மூன்று இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் செல்வபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் ஹமீத் (25), குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஹபிப் அலி (26), செல்வபுரம் பகுதியை சேர்ந்த அலாவூதின் முகமது ஹூசைன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.