கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன், ரூ.3,167 கோடிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதற்கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து தண்ணீர் இணைப்புகளும் மீட்டர் இணைப்புகளாக மாற்றப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் மினிமம் கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதைத் தாண்டி தண்ணீர் பயன்படுத்துபவர்களுக்கு  அவர்கள் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.



இந்த நிலையில் கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 31 ல் சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கோவை மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கடந்த 3 ம் தேதியன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிதளம் இடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளால் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில், தகுந்த பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை மந்தமாக மேற்கொண்டு வந்தது, சாலைகளை மறு சீரமைப்பு செய்யாதது உள்ளிட்ட மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்திய எதையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நோட்டீஸ் வழங்கினார். மேலும் பத்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.


இதேபோல கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராம் நகர், காலிங்கராயர் நகர், செளபார்னிகா லே அவுட், ராஜநாயுடு சாலை, டாடாபாத், ஜீவானந்தம் சாலை, சங்கனூர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீதி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையில் நான்கு சக்கர வாகனத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய தார் சாலையை சேதப்படுத்திய வாகன உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.