கோவையில் செல்போனில் சீரியல் பார்த்தபடி மேம்பாலத்தில் டூவிலரை ஒருவர் அதிவேகமாக இயக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அந்நபருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
சாலை விபத்துகள் அதிகமாக ஏற்பட செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குவது முக்கிய காரணமாக உள்ளது. பலர் சாலைகளில் செல்போன் பேசுவது, ஹேட் செட் போட்டபடி பேசுவது, பாடல் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் அபராதம் விதித்தல், வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பலர் ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாகன ஓட்டி ஒருவர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தை உணராமல் தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கினார்.
இதனை சக வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைக்கவசம் அணிந்து செல்லும் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் செல்போன் ஸ்டேண்ட் அமைத்து செல்போனை அதில் மாட்டியிருந்தார். செல்போனில் சீரியல் ஓடிக் கொண்டிருக்க அதனைப் பார்த்தபடி, மேம்பாலத்தில் வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. மேலும் அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டனர்.
இந்நிலையில் இந்தக் காட்சிகளைக் டிவிட்டர் பக்கத்தில் கோவை செய்தியாளர்கள் பகிர்ந்தனர். இதனைக் கவனித்த கோவை மாநகர காவல் துறையினர், அந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்த வண்டியின் பதிவெண்ணை வைத்து அந்நபரை தேடினர். இதில் அந்நபர் கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துசாமியை பிடித்து போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முத்துசாமி ஆச்சி மாசலா நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருவதும், ஹாட் ஸ்டாரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜராணி 2' நாடகத்தை பார்த்தபடி வண்டியை ஓட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து முத்துசாமி மீது ஆபத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் இருந்த செல்போன் ஸ்டேண்டை போக்குவரத்து பிரிவு காவலர்கள் அகற்றினர்.