கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அடையாளம் தெரியாத நபர், சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்தது குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாக வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயன்படுத்தி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை 5:50 மணி அளவில் சட்ட மன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார். 


இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த அலுவலக உதவியாளர் விஜயன் என்பவர் கதவை சாத்திய அடையாளம் தெரியாத நபரை, சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினார். பின்னர் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்தது குறித்து, பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடைக்கும் தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அந்த நபரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண