கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (44). இவர் பெரிய கடை வீதியில் தங்க விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கோவையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வரும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் செய்து வரும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற சின்ன குட்டி (44) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
2000 ஆயிரம் நோட்டுகளை மாற்ற கமிஷன்:
அப்போது தனக்குத் தெரிந்த நிலகோட்டையைச் சேர்ந்த மீனா (33), தேனியைச் சேர்ந்த பாண்டியன் (52) ஆகியோரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும், 85 இலட்ச ரூபாய் கொடுத்தால் 1 கோடி ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தரப்படும் எனவும் கூறியுள்ளனர். இதன் மூலம் உங்களுக்கு 15 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என குட்டி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரகாஷ் 500 ரூபாய் நோட்டுகளாக 1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகளுடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் தர்கா அருகில் வந்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த குட்டி, மீனா, பாண்டியன் உள்ளிட்ட ஆறு பேர் மூன்று காரில் வந்துள்ளனர். காரில் வந்தவர்கள் பிரகாஷை தாக்கி, அவரிடம் இருந்த ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பித்து சென்றனர்.
6 பேர் கைது:
இது குறித்து பிரகாஷ் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மீனா, பாண்டியன், அழகர்சாமி, சௌமியன், கவாஸ்கர், குட்டி ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்தது எப்படி?
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், “தங்க நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருப்பதாகவும், ரூ.85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் பிரகாசை நேரில் சந்தித்து 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய பிரகாஷ் பணத்துடன் சென்ற போது, பணம் பறிப்பு சம்பவம் நடந்தது.
6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்த காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று 6 பேரையும் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்துள்ளது. எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரி பிரகாசிடம் கேட்டுள்ளோம். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.