கோவையில் செல்போன் ஆப் மூலம் தன்பாலினச் சேர்க்கையாளர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தன்பாலினச் சேர்க்கை:
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் (30) என்பவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகிறார். தன்பாலினச் சேர்க்கையாளரான அவர் Grinder app என்ற செயலியில் தனக்கான துணையை தேடியுள்ளார். இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இருவரும் செல்போன் மூலமாகவே பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தியாகராஜனை தனிமையில் சந்திக்க விரும்புவதாக ராக்கி கூறியுள்ளார். இதன்படி சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள ஆளில்லாத கட்டிடத்திற்கு தியாகராஜனை ராக்கி வரச் சொல்லியுள்ளார்.
இதனை நம்பி ராக்கி சொன்ன இடத்திற்கு தியாகராஜன் சென்றுள்ளார். ராக்கியைச் சந்திப்பதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த தியாகராஜனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த நான்கு பேரும் கத்தியை காட்டி மிரட்டி தியாகராஜனிடம் இருந்து தங்க சங்கிலி, தங்க மோதிரம், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து தப்பித்திருக்கின்றனர். இதையடுத்து, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் 6 கிராம் தங்க செயின் மற்றும் 2 கிராம் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு நான்கு பேர் தப்பிச்சென்றதாக தியாகராஜன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சதித்திட்டம்:
போலீசார் விசாரணையில் ராக்கி என்ற பெயரில் அந்த செயலில் பேசிய நபர் போலி என்பது தெரியவந்து. ராக்கி என்ற பெயரில் அறிமுகமாகி தன்பாலினச் சேர்க்கை போர்வையில் கொள்ளை கும்பல் செயல்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். தியாகராஜனிடம் பழகியதும் திட்டமிட்ட சதி என்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர் செல்போன் செயலியில் ராக்கி என்ற பெயரில் பேசிய நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (27), அவரது நண்பர்களான மாரிச்செல்வம் (23) , அபிராம் (19) , ஹரி விஷ்ணு (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரும் வழிப்பறி செய்த செல்போன், நகை, பொருட்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நான்கு பேரும் இணைந்து செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் தன்பாலினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள நபர்களை தனி இடத்துக்கு வர சொல்லி, அவர்களிடம் உள்ள நகை பணம் ஆகியவற்றை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததும், அவர்கள் புகாரளிக்க பயந்து காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் இருப்பார்கள் என திட்டமிட்டு வழிப்பறி சம்பவங்களை அரங்கேற்றி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்