கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நாட்டுக்கோழியின் மெகா சைஸ் முட்டை கின்னஸ் சாதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மின்வாரிய காலணியைச் சேர்ந்தவர் அபூ. இவரது மனை சாமிலா. இவர்களது வீட்டில் 40 நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஒரு நாட்டுக் கோழி ஒரு முட்டை போட்டுள்ளது. அது வழக்கமான முட்டையின் அளவில் இல்லாமல், மிகப்பெரிய அளவில் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அக்குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இது குறித்து சாமிலா கூறும் போது, “வழக்கமாக நாட்டுக்கோழி முட்டை 40 முதல் 50 கிராம் எடை மட்டுமே இருக்கும். ஆனால் இந்த கோழி முட்டை 90 கிராம் எடை இருந்தது. இதுமட்டுமில்லாமல் முட்டையின் உயரம் 8.1 செ.மீ., சுற்றளவு 5.9 செ.மீ. இருந்தது. வழக்கமான முட்டையை விட இரண்டு மடங்கு அளவு பெரிதாக இந்த முட்டை இருக்கிறது. எனவே இந்த முட்டையை வீடியோ எடுத்து கின்னஸ் சாதனைக்கான இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளோம். இதை ரெப்ரிஜிரேட்டரில் பாதுகாப்பாக வைத்துள்ளோம்.
நாங்கள் சொந்தமாக எண்ணெய் செக்கு வைத்துள்ளோம். அதில் கிடைக்கும் புண்ணாக்குகளை தருவதால் நாட்டுக் கோழிகள் பெரிய அளவில் வளர்கின்றன. முட்டைகளையும் பெரிய அளவில் இடுகின்றன” எனத் தெரிவித்தார். இந்த மெகா சைஸ் முட்டையை அக்கம் பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்