திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசுப் பணியாளர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார் (40). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தர ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி சுப ஸ்ரீ (34) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப ஸ்ரீ நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த யோகா பயிற்சியில் சுப ஸ்ரீ கலந்து கொண்டார். அதேபோல கடந்த டிசம்பர் 11ம் தேதியன்றும் யோகா பயிற்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார்.


பழனிகுமார் தனது வாகனத்தில் சுப ஸ்ரீயை அழைத்து வந்து, அம்மையத்தில் விட்டு சென்றுள்ளார். பின்னர் ஒரு வார கால பயிற்சி முடிந்த பின்னர், கடந்த 18 ம் தேதியன்று பழனிகுமார், தனது மனைவியை அழைத்துச் செல்ல மீண்டும் வந்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்த போதும் சுப ஸ்ரீ வராததால் சந்தேகம் அடைந்த பழனிகுமார், அம்மையத்திற்குள் சென்று விசாரித்துள்ளார். அப்போது பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்று விட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பழனிகுமார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது வகுப்பில் இருந்து வெளியே செல்லும் சுப ஸ்ரீ, சாலையில் ஓடிச் சென்று ஒரு காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் இருப்பதைப் பார்த்துள்ளார்.


இதனிடையே பழனிகுமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு மிஸ்ட் கால் வந்துள்ளது. அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசிய போது, தான் டாக்சி டிரைவர் எனவும், தனது காரில் ஏறிய பெண் ஒருவர் தனது கணவரிடம் பேச வேண்டுமென போன் வாங்கியதாகவும், அவர் உங்களுக்கு அழைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் போன் எடுக்காததால் போனை திரும்ப என்னிடமே தந்து விட்டார் எனவும், செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் அந்த பெண் இறங்கி சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதையடுத்து அப்பகுதியில் பழனிகுமார் மனைவியை தேடி கிடைக்காத நிலையில், காணாமல் போன தனது மனைவி சுப ஸ்ரீயை கண்டுபிடித்து தருமாறு ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காணாமல் போன சுப ஸ்ரீயை தேடும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுப ஸ்ரீயை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் நேற்று காலை செம்மேடு காந்திநகர் அருகேயுள்ள கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர் உயிரிழந்த நபர் சுபஸ்ரீயாக இருக்கும் என சந்தேகம் அடைந்த காவல் துறையினர் கணவர் பழனிகுமாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். உயிரிழந்தவர் சுப ஸ்ரீ தான் என்பதை அணிந்திருந்த மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் கொண்ட கையில் அணியும் பேண்ட் வைத்து உறுதிபடுத்தினார். இதையடுத்து சுபஸ்ரீயின் உடல் மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.