கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவில் அன்னூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் என இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த இரண்டு ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தமாக 30 ஊராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கு அன்னூர் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 1000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்றால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த சூழலில் இரவு நேரங்களில் அன்னூர் அரசு மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படும் நோயாளிகளை முறையாக கவனிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சாணிப் பவுடர் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலமாக அப்பெண் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் அப்பெண் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து பலமுறை கதவை திரும்ப திரும்ப தட்டிய நிலையிலும், கதவு திறக்கப்படவில்லை. சிகிச்சைக்காக வந்த நோயாளி உயிருக்கு போராடிய நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால் நோயாளியுடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரம் கதவை தட்டிய பின்னரே இரவு நேரத்தில் பணியில் இருந்த செவிலியர் கோமதி என்பவர் அவசர சிகிச்சை பிரிபு கதவை திறந்துள்ளார். பின்னர் சானிபவுடர் குடித்த பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று செவிலியர் கோமதி சிகிச்சை அளித்துள்ளார்.
இதனை அங்கிருந்த பொது மக்களில் ஒருவர் வீடியோவாக எடுத்து மருத்துவமனையின் அவல நிலை குறித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருப்பதும், தொடர்ந்து தட்டிய நிலையிலும், திறக்கப்படாமல் இருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. மேலும் அந்த வீடியோ பேசும் நபர் “எமர்ஜென்சி ஸ்டாப் உள்ளே லாக் செய்து விட்டு தூங்குகிறார்கள். இப்படி தான் இருக்கணும்” என விரக்தியோடு பேசுவதும் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்