பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக தனியார் ரயில் சேவை இன்று தொடக்க உள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. கோவையில் இருந்து சீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ரயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், இன்று முதல் பயணத்தை தொடங்க உள்ளது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.




பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த ரயில் கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட் ஆனது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ரயில் கட்டணம்


இந்த ரயில் சேவையின் கட்டணமானது ரயில் கட்டணம், பேக்கேஜ் கட்டணம் என இரண்டு வகையாக உள்ளது. கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரயில் கட்டணம் ரூ.2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணமானது 4,999 ரூபாயாக உள்ளது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 உள்ள நிலையில், தனியார் ரயில் கட்டணம் ரூ. 5,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999 ரூபாயாக உள்ளது. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 உள்ள நிலையில், தனியார் ரயில்கட்டணம் ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 9,999 ரூபாயாக உள்ளது. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190. ஆனால் தனியார் ரயில் கட்டணம் ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 12,999 வசூலிக்கப்படுகிறது. 



தனியார் ரயில் சேவைக்கு எதிர்ப்பு


ரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனியார் ரயிலில் கட்டண கொள்ளை நடப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.




இந்நிலையில் ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.ஆர்.எம்.யூ எனப்படும் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பினர் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். ரயில்கள் தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை ரயில் நிலையம் முன்பு அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோவை முதல் சீரடி வரை தொடங்ப்பட்டுள்ள ரயிலை தனியாருக்கு அளித்ததை திரும்பப் பெற வேண்டும், டெல்லி நேபாளம் ரயிலை ஐஆர்சிடிசிக்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும், பாரத் கெளரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண