அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, கோவையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் வானகரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். 


கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது, ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது ’ஓபிஎஸ் ஒழிக... துரோகி ஓபிஎஸ்...” போன்ற முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய போது, அதிமுகவினர் பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டில்களை ஓ. பன்னீர் செல்வத்தின் மீது தூக்கி எறிந்தனர். மேலும் அவர் வந்த வாகனத்தின் டயரை பஞ்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டதாக கூறி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவில் இரட்டை தலைமை தான் இருக்க வேண்டும் என்றும், கட்சியில் ஓபிஎஸ்-க்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 




இது குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ”அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேப்பர் வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட கூடாது” எனத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிகம் உள்ள கோவை மாவட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண