திருப்பூரில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் திருப்பூர் மாவட்டத்தில் நினைவில் கூறத்தக்க வகையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரோகித் ராஜா, ரோஷன் ராஜா எடுத்த மதிப்பெண்ணும் சேர்ந்துள்ளது. ஏனெனில் இரட்டையர்கள் மதிப்பெண்களிலும் இணை பிரியாமல், ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.




திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி அக்நெல். இந்த தம்பதியினருக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து பிறந்த இரட்டையர்கள். இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தனர். 




இந்நிலையில், நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா இருவரும் 600க்கு 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல, மதிப்பெண்கள் எடுப்பதிலும், ஒரே மாதிரி மதிப்பெண் தான் எடுப்போம் என்று பிளஸ் டூ பொதுத் தேர்வில் இரட்டையர்களான இருவரும் சொல்லி வைத்தாற்போல், இருவரும் 417 மதிப்பெண் எடுத்துள்ளனர். பாட வாரியாக இருவரும் பெற்ற மதிப்பெண்களில் சற்று மாறுபாடுகள் இருந்த போதும், இருவரும் மொத்த மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இதனால் இருவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருந்து இரட்டையர்கள் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரியாக ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பெற்றோர் மற்றும் சக பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண