புதுக்கோட்டை மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ராமன். 80 வயதான இவர், தனது ஆரம்ப கால கட்டத்தில் தனியார் பேருந்தின் நடத்துநராக பணியாற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீ ராமனை பசுமாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. செயற்கை கை பொருத்தி பார்த்தும், அது சரிவரவில்லை. ஆனாலும், அவர் தன்னம்பிக்கை உடன் சைக்கிள் ஓட்டிப் பழகினார்.
இந்த நிலையில், 1971 ம் ஆண்டில் இவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக வேலை கிடைத்தது. 37 ஆண்டு காலம் ஒற்றை கையோடு போஸ்ட் மாஸ்டர் வேலை செய்த பின்னர் இவர் பணி ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகளுக்காக கோவை தடாகம் பகுதியில் குடி இருந்து வருகிறார். தனது அனுபவத்தைக் கொண்டு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஸ்ரீ ராமன் வேலைக்கு சேர்ந்தார்.
தனது வாழ்க்கை காலம் முழுவதிலும் உழைக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் இந்த முதியவர் தள்ளாத வயதிலும், ஒற்றைக் கையோடு சைக்கிளில் பயணித்து கொரியர் விநியோகம் செய்து வருகிறார். தடாகம் பகுதியில் இருந்து தினமும் சாய்பாபா காலனி வரை பயணித்து தனியார் கொரியர் நிறுவனத்திற்கு வரும் இவர், அங்கு பார்சல்களை பெற்றுக் கொண்டு வீடு வீடாக விநியோகம் செய்கிறார். ஒற்றைக் கையோடு சைக்கிளில் பயணிக்கிறோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் சர்வ சாதாரணாமக தனது பயணத்தை மேற்கொள்ளும் இந்த முதியவர் நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் கோவையை வலம் வருகிறார்.
இது குறித்து ஸ்ரீ ராமன் கூறுகையில், “எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் காலை 5 மணிக்கே எழுந்து சமையல் செய்து சாப்பிட வைத்து, மருந்து கொடுத்து விட்டு 11 மணிக்கு பணிக்கு வருகிறேன். கொரியர் நிறுவனத்தின் மூலம் 7,500 ரூபாய் மாத வருமானம் கிடைக்கிறது. அதை வைத்து மனைவிக்கு மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரை வாங்கி கொடுக்க வேண்டும். சைக்கிள் ரிப்பேர் செய்ய வேண்டும். புது சைக்கிள் வாங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லை.
வருகின்ற வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறேன். வயது ஒரு பொருட்டல்ல. உடலில் வலு இருக்கும் வரை உழைப்பேன். ஒரு நாளும் நான் சும்மா உட்கார்ந்ததே இல்லை. எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் எந்த சிரமமும் இல்லை. என் வாழ்க்கை முழுவதும் உழைத்தே கழிப்பேன்." என அவர் தெரிவித்தார். கையை இழந்தாலும் ஒற்றை கையோடு முதிய வயதிலும் உழைத்து வாழும் ஸ்ரீ ராமன், இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்