நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்தாண்டில் ஆறாவது முறையாக கடந்த 18 ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.  சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் வந்த பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார். வழிநெடுக இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்தது. அங்கு கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


பள்ளி நிர்வாகம் மீது வழக்கு


இதனிடையே பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், சிறுவர்களுக்கு ராமன், சீதை மற்றும் ஹனுமன் வேடமணிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது, சில சிறுவர்கள் மோடியின் முக உருவம் கொண்ட முகமூடிகளையும் கையில் வைத்திருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியை வரவேற்க அரசுப் பள்ளி மாணவர்களும் சீருடையில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியது.




இதனிடையே இந்த நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பள்ளி குழந்தைகளை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும்  நடுநிலை பள்ளி மாணவர்களை சீருடையுடன் பிரதமர் பிரச்சார நிகழ்விற்கு அழைத்து சென்றது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து  பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட குழந்தை நல அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் சாய்பாபா காலனி போலீசார் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்


இந்நிலையில் கோவை வடவள்ளியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகமும் மாணவர்களை பேருந்து மூலம் அழைத்து வந்து இருப்பதும் தெரிய வந்தது. கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கடவுள்  வேடம் அணிந்து மாணவர்களை அழைத்து வந்து இருப்பதும், பாஜக துண்டுகளையும் மாணவர்களுக்கு அணிவித்து பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட  நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள், பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே கோவை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க கோரி கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளார். பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி பள்ளி குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் கல்வித்துறை என தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.