1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மக்களவை தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தன.


கோவையை விட்டுத் தராத தி.மு.க.:


அதன் காரணமாக இதுவரை கோவை மக்களவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் ஒரே ஒரு முறை மட்டுமே நேரடியாக மோதியுள்ளன. இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோத உள்ளன.


கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் 2019 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோவையில் தொகுதியில் போட்டியிட விரும்பினர். அதற்கேற்ப அக்கட்சி தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். கமல்ஹாசன் கோவையில் போட்டியில்லை என்பதால், அக்கட்சிக்கு கோவை தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கிய திமுக, கோவையை தர மறுத்தது. இதனால் கோவை தொகுதியில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மநீம, சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திமுக தொகுதியை விட்டுத்தரவில்லை.


வேட்பாளர் தேர்வில் டுவிஸ்ட் வைத்த திமுக


திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்த நிலையில், அதற்கு பழிதீர்க்கும் வகையிலும், கட்சியை பலப்படுத்தும் வகையிலும் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. இதனால் திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


கோவை தொகுதியில் திமுக ஐடி விங்க் இணை செயலாளரும், தொழிலதிபருமான மகேந்திரன் அல்லது திமுக மருத்துவ அணி மாநில இணை செயலாளர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திமுக கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவராக உள்ள கணபதி ராஜ்குமாரை கோவை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.


யார் இந்த கணபதி ராஜ்குமார்?


அதிமுகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த கணபதி ராஜ்குமார் 2014 ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார். எஸ்.பி. வேலுமணி ஆதரவாளராக இருந்த இவர், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் எஸ்.பி. வேலுமணி உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சி பணிகளில் இருந்து அவர் ஒரங்கப்பட்டார்.


இதையடுத்து கடந்த 2020 திமுகவில் கணபதி ராஜ்குமார் சேர்ந்த நிலையில், அவருக்கு மாநகர மாவட்ட அவைத்தலைவர் பதவி தரப்பட்டது. தி.மு.க.வில் வேட்பாளராக பலர் போட்டியிட்ட நிலையில், மற்றவர்களை தவிர்த்து  இந்த தேர்தலில் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைக்க செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவே காரணம் என கூறப்படுகிறது. சிறையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நடத்திய ஆலோசணையின் பேரிலேயே, இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.