கோவைக்கு விமானத்தில் வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கொண்ட வட மாநில கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறிகள் நடப்பதாக  காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பூ மார்க்கெட் பகுதியில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல், ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை திருடுவதை பார்த்துள்ளனர். இதையடுத்து 7 பேரையும் காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை  சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23), பீகாரை சேர்ந்த மனிஷ் மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 வயது  சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்த போது, 7 பேரும் விமானத்தில் கோவை வந்து அறை எடுத்து தங்கி டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் கோவையிலிருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின்னர் பணம் முழுவதும் செலவான பிறகு மீண்டும் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு திரும்பி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது.


இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் பகதூர் மகடோ, சந்தோஷ், பப்லு மகடோ, மனிஷ் மகோலி ஆகிய 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண