தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணை, சுண்ணாம்பு கல்வாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கோவை குற்றாலம், கவியருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நஞ்சுண்டாபுரம் - வெள்ளலூர் சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.




கோவை மாநகர பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.




நேற்றைய தினம் சின்னக்கல்லார் மற்றும் சோலையார் பகுதிகளில் 9.6 செ.மீ மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 9.2 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 8.9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 165 அடி கொண்ட சோலையார் அணையில் 162.55 அடியும், 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில் 68.51 அடியும், 120 அடி கொண்ட ஆழியார் அணையில் 117.90 அடியும் நீர்மட்டம் உள்ளது.


நீலகிரியில் தொடர் கனமழை




நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தெப்பக்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண