கோவை : மோசடி வழக்குப்பதிவு.. தற்கொலைக்கு முயன்ற இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவுத் தலைவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Continues below advertisement

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தொழிலதிபரான இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் ஒன்று செங்கல்பட்டு பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் நிலப் பிரச்சனை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த நில பிரச்சினையை சரி செய்து தருவதாக கூறி கடந்த 2020 முதல் 25 லட்சத்து 59 ஆயிரம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாங்கல்ய பூசை செய்தால் விரைவில் பிரச்சினை தீரும் என கூறியதால் தொழிலதிபர் கருப்பைய்யா தனது மனைவியின் 15 சவரன் தங்க நகையினையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

பணம், நகைகள் வாங்கிய பின்னரும் நிலப் பிரச்சினையை தீரத்து வைக்காமல் பிரச்சன்ன சுவாமிகள் காலம் தாழ்த்திய நிலையில், இது குறித்து கருப்பையா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி ஜோதிடப்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரம் பகுதியை ஹரபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் மீதும் மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 3 ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிரச்சன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, தாயார் கிருஷ்ணகுமாரி மற்றும் மகள் ஆகிய 4 பேரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசும் பிரச்சன்ன சுவாமிகள், “பொய்யான தகவலை பரப்பி வழக்குப்பதிவு செய்துள்ளதால் மனம் உடைந்துள்ளோம். எங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளனர். மனவேதனை அளிப்பதால் எங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம். இது எங்களது மரண வாக்குமூலம். நாங்கள் எங்களது முடிவை தேடிக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரச்சன்ன சுவாமிகளின் தாயார் கிருஷ்ணகுமாரி (62) உயிரிழந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதால சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதிபிரியா, சங்கர் உள்ளிட்டோர் மீது செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரச்சன்ன சுவாமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Continues below advertisement
Sponsored Links by Taboola